பூவிதழ்
Friday, 13 April 2018
புத்தனை விழுங்கிய புழு
புத்தனை விழுங்கிய புழு ...
தன் நிழலிலேயே
இளைப்பாறும் பறவை ஒன்றின்
பறத்தலின் வேகத்தை
கற்பனை செய்பவன்
வருத்தங்களை எடைக்குப் போட்டால்
யார் வாங்குவார் என
புலம்பித் திரிந்து
தற்கொலை நொடிகளை
எடை கற்களாய் வைத்து
பிடித்தமான சொற்களை
தராசில் வைக்கிறான்
தராசு இயல்பு இழந்து
சுழித்து ஓடும் நதியில் விழுகிறது
விழுங்கிய மீனொன்று
நீருக்குள் மூழ்கும் தன்மை இழந்து மிதக்கிறது
காற்று உள்ளே அமிழ்த்த முயன்று தோற்று
எடை கற்களை தராசை
சிக்கெடுக்கிறது
மீன்கொத்தி அதைக் கொத்தி
பறக்கும் திறன் சரிந்து வீழ்கிறது
வேடனுக்கு அம்பு மிச்சம்
அனலில் வாட்டிய பிறகு
எல்லா பசியற்றும் போகிறான்
பசியற்ற உடல் எடையற்று
தூக்கில் தொங்கும் போது
மரத்தின் இலைகளில் ஒன்று அதிகம்
புத்தனை விழுங்கிய புழு
தியானம் கடந்து உறங்குகிறது
இன்னொரு உடலின் கனவில்.
இன்னொரு உடலின் கனவில்.
Thursday, 12 April 2018
லிட்டுவின் நூல்கண்டு - 2
லிட்டு முன்பு போலவே நூல் கண்டின் நுனியைப் பிடித்தபடி உருட்டினான். அது வேகமாக ஓடியது. பிரிந்து உருண்டு ஓடும்அதன் வேகத்தில் நூல் கண்டே தீர்ந்துவிடும் போல இருந்தது .
லிட்டுவுக்கு குளிர் அதிகமாகத் தெரிந்ததால் நூல்கண்டைப் பின் தொடர்வதற்கு கொஞ்சம் கடினமாக இருந்தது இப்போது நூல் கண்டு ஐரோப்பாவில் இருந்த ஒரு பெரிய பண்ணையின் உள்ளே உருண்டு ஓடியது .
அங்கு மேய்ந்து கொண்டிருந்த ஒரு மாடு நூல்கண்டை பச்சை புல் என நினைத்து சேர்த்து மேய்ந்து கடித்துத் துப்பியது .
"நான் உலகத்தின் ஆதியும் அந்தமும் தேடிக் கொண்டு போகிறேன் . அதனைக் கண்டு பிடிக்க உதவும் நூல் கண்டை புல் என நினைத்து நீ கடித்துத் துப்பிவிட்டாய் " என்று கூறிய விட்டு துள்ளி வந்த பசு கன்றை மெல்ல தடவிக் கொடுத்தான் .
தொழுவத்தின் உள்ளே சென்ற மாடு மஞ்சள் நிற நூல் கண்டைக் எடுத்து வந்து கொடுத்தது .
லிட்டு இம்முறை சிந்தனை ஏதும் இன்றி நூலின் நுனியைப் பிடித்துக் கொண்டு உருட்டினான் அதன் வேகம் மிக அதிகமாக இருந்தது . வட அமெரிக்காவில் ஒரு வினோதமான விலங்கின் அருகில் சென்றது .
இதற்கு முன் லிட்டு அதை நேரில் பார்த்ததில்லை அதை பீவர் என்று அழைப்பார்கள் தமிழில் நீர் நாய் என்று சொல்வார்கள் அதன் உரோமம் விலை மதிப்பு மிக்க தாம் . அதன் இரண்டு முன் பற்கள் முன்புறம் நன்கு நீண்டு இருந்தன சிறிது நேரத்திலேயே சிறு கூட்டமாக அவை சேர்ந்து விட்டன .
ஒரு குட்டி பீவர் நூல்கண்டை பிரித்து இழுத்து வளைக்குள் இழுத்துச் சென்றது
" ஏய் ... . ஏய்..... குட்டி பீவர் என் நூல் கண்டை துண்டாக்கி விடாதே , நான் உலகத்தின் ஆதியும் அந்தமும் தேடிக் கொண்டு போகிறேன் . அதனைக் கண்டு பிடிக்க உதவும் நூல் கண்டை எதுவும் செய்து விடாதே" என்று லிட்டு சொன்னான் . ஆனால் அவன் சொல்லி முடிப்பதற்கு முன்னே குட்டி பீவர்கள் நூல்கண்டைக் கடித்து துண்டாக்கி விட்டன .
லிட்டுவின் குரலால் , பீவர்கள் எல்லாமே முன்னங்கால்களை இரு கைகளைப் போல உயர்த்தி நிமிர்ந்து பார்த்தன.
ஒரு உயரமான பீவர் , அதுதான் எல்லா பீவர்களுக்கும் தலைவனாக இருக்க வேண்டும் அது ஒரு பாறையின் பின்னால் இருந்து ஆரஞ்சு நிற நூல் கண்டை எடுத்து வந்து தந்தது . முன்பு போல லிட்டு நூல் கண்டை உருட்டினான் அது காற்றைக் கிழித்துக் கொண்டு ஓடியது பின் தொடர்ந்த லிட்டுவுக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது .
தொடர்ச்சி... link இல்
தொடர்ச்சி... link இல்
https://poovithalumesh.blogspot.in/2018/04/3.html?m=1
Friday, 6 April 2018
கவிதை
புராஜக்ட்
பகல் என்று சொல்லி மடித்து வைத்தாள்
அதன் மீது
அவள் பாதி சப்பிய ஆரஞ்சு மிட்டாயை
சூரியன் என ஒட்டி வைத்தாள்
கருப்பு காகித்த்தை
இரவு என்று விரித்து வைத்தாள்
அதன் மீது
அறுந்து விழுந்த
அப்பாவின் சட்டை பட்டனை
நிலா என்று ஒட்டி வைத்தாள்
புராஜெக்ட் தயார்
இன்று திங்கட்கிழமை
அவள் உருவாக்கிய
பகலும் இருக்கிறது இரவும் இருக்கிறது
அவற்றை பார்த்தபடி
மாடத்தில் விளக்கு எரிகிறது.
Thursday, 5 April 2018
குழந்தை இலக்கியம்
வயதான பெரியவர் ஒருவர் மொரப்பூரில் வாழ்ந்து வந்தார் அவருக்கு வயது நூறு. அவரிடம் பெரியதாக சொத்து ஏதுமில்லை ஒரு மாடு மட்டும் இருந்தது . அதற்கு தேவையான தீனியை கொஞ்ச நேரத்திலேயே சேகரித்து விட்டு வேறு ஏதேனும் வேலை செய்ய சென்று விடுவார் . அவருடைய இரண்டு மகன்களும் வெளியூரில் வேலை செய்து வந்தனர் .
ஒரு நாள் திடீரென உடல் நலம் குன்றி இறந்து போனார் . பிறகு மகன்களால் மாட்டுக்குப் புல்லு பொடி சேகரித்துப் பராமரிக்க இயலவில்லை எனவே, மாட்டைப் பக்கத்து ஊர் சந்தையில் விற்று விடுவது என முடிவு செய்து விற்பதற்காக ஓட்டிச் சென்றனர் .
இருவரும் முன் பின் ஒருவராக மாட்டை ஓட்டிச் சென்றனர் . வழியில் எதிரே ஒரு வயதான பெரியவர் வந்தார். முன்னால் சென்றவனிடம் எங்கே போறீங்க என்று விசாரித்தார் அவன் , நாங்க கம்பைநல்லூர் வெள்ளிச் சந்தையில் மாட்டை விற்க போகிறோம் என்று சொன்னான்.
"இவ்வளவு மெதுவாகப் போனால் நேரத்துல சந்தைக்குப் போக முடியாது" என்று பெரியவர் சொன்னார் .
" அதை என்னிடம் மட்டும் சொன்னால் போதாது, மாட்டைப் பின்னால் ஓட்டி வரும் என் தம்பியிடம் சொல்லுங்க " என்றான்
பெரியவர் மாட்டைப் பின்னால் ஓட்டி வருபவனிடம் சொல்வதற்காக வேகமாக நடந்து வந்தார் ரொம்ப நேரமாகியும் வந்து, சேரவில்லை மாட்டின் வயிறு பகுதிக்கு வந்த போது " எவ்வளவு பெரிய மாடு " என்று வியந்து போனார் .
அவர் செல்லமாக கழுகு ஒன்றை வளர்த்து வந்தார் . அதை எப்போதும் தன் சட்டைப்பையிலே வைத்திருப்பார் . கழுகுக்குப் பசிக்கும் போது இரை தேட பறக்க விடுவார் . அன்றும் ஏதேனும் இரை தேடட்டும் என்று கழுகை வெளியே பறக்க விட்டார் .
கழுகு மாட்டைத் தூக்கிக் கொண்டு பறந்தது. சிறிது நேரத்துக்குப் பிறகு அருகில் இருந்த காட்டில் ஒரு மரத்தின் மீது அமர்ந்து மாட்டைக் கொத்தித் தின்ன ஆரம்பித்தது .
திடீரென வானம் கறுத்து மழைப் பெய்யத் தொடங்கியது , காட்டில் மேய்ந்து கொண்டிருந்த கொழுத்து வளர்ந்த செம்மறி ஆடு ஒன்று மழைக்காக அந்த மரத்தடியில் ஒதுங்கியது . அதே போல மழைக் குளிரைத் தாங்கமுடியாத நரி ஒன்றும் மரத்தடிக்கு வந்து ஆட்டின் தாடியின் கீழே நின்று கொண்டது .
வெகு நேரமாகியும் மழை நிற்பதாகத் தெரியவில்லை. வானம் வெளி வாங்கத் தொடங்கும் முன் சிறு சிறு தூறல்களைப் போட்டது. மழை ஓய்ந்து விட்டதா என நரி அன்னாந்து பார்த்தது அதன் மூச்சுக்காற்றில் மிரண்டு போன ஆடு ஏதோ புயல் காற்று வந்து விட்டதாக மிரண்டு, உடலைக் குலுக்கி ஓடியது , அதனால் மரம் அதிர்ந்து குலுங்கி சாய்ந்தது .
ஏதோ ஆபத்து நேர்வதாய் நினைத்த கழுகு அங்கிருந்து பறந்து விட்டது . மாதங்கள் உருண்டு ஓடின . மாட்டின் தோலின் மீது ஒரு புதிய நகரமே ஒரு பக்கம் உருவாகி விட்டது .
திருமணம் முடிந்து பல ஆண்டுகளாய் குழந்தை இல்லாத அரசனுக்கு நேற்று தான் குழந்தை பிறந்தது . தன் மனைவிக்கு வேட்டையாடி ஏதேனும் பரிசாக வழங்க காட்டுக்கு வேட்டையாட வந்தான் அரசன் பொழுது சாயும் வரை எதுவும் கிடைக்கவில்லை . வெறுங்கையோடு தான் இன்று போக வேண்டுமே என கவலைப்பட்டான் , இறுதியில் அவன் காலுக்கு கீழே ஏதோ தட்டுப்பட்டது அது ஒரு மாட்டுத் தோலின் வால் என்று தெரிந்தது .
அரசன் சிறிதும் தாமதிக்கவில்லை தன் மனைவிக்குப் பரிசாக இந்த மாட்டுத் தோலையாவது கொண்டு போய்க் கொடுக்கலாம் என , அதை ஒரே கையால் இழுத்தான் அதன் மீதிருந்த நகரமே சரிந்து விழுந்தது. வேகமாக மாட்டுத் தோலோடு சென்று தன் மனைவியிடம் தந்தான் . அதை வாங்கிய அரசி சில நொடிகளிலேயே அதில் குழந்தைக்கு ஓர் அழகிய தொப்பியை செய்து முடித்தாள் . நேற்று பிறந்த குழந்தை அதை எடுத்து தலையில் அணிந்து கொண்டது .
இக்கதையில் யார் பலசாலி ?
-இறந்த பெரியவரா?
-மாட்டை ஓட்டிச் சென்றவர்களா?
-விரைந்து போகச் சொன்ன வழிப்போக்கரா?
- மாட்டைத் தூக்கிப் பறந்த பருந்தா?
- பருந்தையும் கழுகையும் சுமந்த மரமா?
- தன் சிலிர்ப்பால் மரத்தையே சாய்த்த ஆடா?
_ தன் மூச்சல் ஆட்டையே நடுங்க வைத்த நரியா?
- ஒரே கையால் மாட்டுத் தோலை இழுத்த அரசனா ?
_ சில நொடிகளிலே தோலில் தொப்பி செய்த அரசியா ?
- அந்த தொப்பியை அணிந்த பிறந்து ஒரு நாளே ஆன குழந்தையா?
Monday, 2 April 2018
கவிதை
கண்ணாமூச்சி விளையாடும் குழந்தைகள்
பகலில் இருந்தபடியே
இரவை உருவாக்குகிறார்கள்
நீரிலிருந்தபடியே நெருப்பை உருவாக்குவது போல
சில நேரங்களில்
நைந்த கைக்குட்டை கிழிசல்கள்
விண்மீன்களை உருவாக்கும்
இரவின் நீளம்
ஓர் எண்ணில் முடியும்
10...25...36...50...100 என
அவ்வப்போது மாறும்
1,2,3,4,5,8, 17 35 100 என
அழகிய தவறோடு எண்ணி முடித்த
அதி சிறுவனை கூட்டித்திரிந்த கடவுள்
எல்லோரையும் கண்டுபிடித்தார்
...... பின்
பார்வையற்ற சிறுவனுக்குப் பதிலாக
எண்ணத் தொடங்கிய கடவுள்
அவனுடைய இரவை
எந்த எண்ணில் முடிப்பதென தெரியாமல்
திருதிருவென முழித்துக் கொண்டிருக்கிறார்.









