Sunday, 24 November 2019

சிரிக்கத் தெரிந்த பூனை

சிரிக்கத் தெரிந்த பூனை

 சுவற்றின் மீது ஏறி பூனைகள் விளையாடிக்கொண்டிருந்தன.  அந்த வழியாகச் சென்ற வழிப்போக்கர்களில் ஒருவன் தன் நண்பனிடம் வானத்தில் ஒரு பெரிய ஓட்டை போட்டு அதன் வழியாக வெளியேறி விட்டால் வேறொரு உலகத்திற்குச் சென்று விடலாம் என்று சொன்னான். அதைக்கேட்ட அவனுடைய நண்பன், அது வேறொரு உலகம் இல்லை அதுதான்  சொர்க்கம்  என்று பதில் சொன்னான்.

  சுவரின் மீது விளையாடிக் கொண்டிருந்த பூனைகளில் இருந்த வெள்ளைப் பூனை இருவரின் உரையாடலைக் கேட்டு,  கலகலவென சிரித்தது. பிறகு "சொர்க்கம்  என்பது மேலேயும் இல்லை கீழேயும் இல்லை.  நீங்க இருக்கிற இடம் தான் சொர்க்கம் "  என்று சொல்லி மீண்டும்  சிரித்தது. 
 
  பூனை சிரிப்பதைப் பார்த்து அவர்களுக்கு வியப்பாக இருந்தது. ஆனாலும்  அந்தப் பூனை, தங்களைப் பார்த்து கேலியாகத்தான் சிரிக்கிறது என்று எண்ணி கோவப்பட்டார்கள். அதனால் பூனையைப் பிடித்துக் கொண்டு சென்று அருகில் இருந்த காவலரிடம் ஒப்படைத்து, நடந்ததைச் சொன்னார்கள்.

  காவல்காரன் "சிரிக்கத் தெரிந்த பூனையா ? " என்று வியப்போடு பார்த்தான்.  பூனைகள் சிரிப்பதைப் பற்றி நான் கேள்வி பட்டதில்லை , பூனைகள் சிரிக்க சட்டத்தில் இடம் இருக்கா என்று விசாரிக்க வேண்டும்,  விலங்குகள் மனிதர்களைப் பார்த்து சிரிப்பது சட்டப்படி குற்றம்  எனவே இந்த பூனைக்குச் சரியாக தண்டனையை நான் வாங்கித் தருகிறேன் என்று அவர்களிடம் காவல்காரன் சொன்னான். அப்போதும் பூனை சிரித்தது.

   காவலருக்குக் கோபம் வந்துவிட்டது " இந்தப் பூனைக்கு அதிகபட்ச தண்டனை தரும் அதிகாரம் தன்னிடம் இல்லை" என்று கூறி அதிக தண்டனை வாங்கித் தருவதற்காக மந்திரியிடம் பூனையை பிடித்துச் வரச் சென்றான்.


  அங்கு மந்திரி "மூன்று தலை முடிகள் நேராக நின்றாலே போதும் அவன் பெரிய அறிவாளியாக இருப்பான் அதனால் இந்த நாடு முழுவதும் தேடி அப்படி ஒரு அறிவாளியைக் கண்டு பிடித்து  வர வேண்டும்" என காவலர்களுக்குக் கட்டளை பிறப்பித்துக் கொண்டிருந்தார்.

  " மூன்று  முடி மட்டும் அல்ல எத்தனை முடி நேராக இருந்தாலும் அறிவாளியாக இருப்பான் என்று சொல்ல முடியாது" என்று கூறி அங்கேயும் பூனை கலகலவென சிரித்தது.

  மந்திரியின் எதிரில் சாதாரண மக்கள் சிரித்தாலே தண்டனைக்குரிய குற்றமாகும் அப்படி இருக்கும் போது,  ஒரு பூனை சிரித்தது மந்திரிக்குக் கடுமையான கோபத்தை வரவழைத்து விட்டது. இதனால் பூனைக்கு மரண தண்டனை வாங்கித்தர வேண்டும் என்று முடிவு செய்து அரசரிடம்  கூட்டி சென்றார் . மேலும் சிரிக்கும் பூனை பற்றிய  இந்த இரகசியத்தை யாரிடமும் சொல்லக் கூடாது என மூன்று பேரிடமும் சொன்னார்.


  அதைக்கேட்ட பூனை ,  "ஒருவரிடம் சொல்லும் ரகசியமே நீண்டநாள் நீடிக்காது நீங்கள் மூன்று பேரிடம் ரகசியம் என்று சொல்லி இருக்கிறீர்கள் அது எத்தனை நாள் நீடிக்கும் என்று பார்ப்போம் " என்று கூறி கலகலவென சிரித்தது. இது மேலும் மேலும் மந்திரிக்கு கோபத்தை வரச் செய்தது. அதனால் உடனடியாகப் பூனையை அரசரிடம் அழைத்துச் சென்றார்.

  அரசர் வழக்கம் போல பல  நாடுகளைச் சுற்றிவிட்டு அன்றுதான் அரண்மனைக்கு வந்திருந்தார்.  மந்திரி பூனையோடு வருவதைப் பார்த்து, "பூனைகளைப் போல உலகத்தில் யாரும் முட்டாள் இல்லை, உலகம் தோன்றியதிலிருந்தே எலிகளை  மட்டுமே பிடித்து தின்று கொண்டிருக்கின்றன இதுவரை ஒரு  புலியைக் கூட  தின்றது இல்லை " என்று சொல்லி உரத்து சிரித்தார்.


    மந்திரி நடந்ததையெல்லாம் அரசரிடம் சொன்னார்.  அப்போதும் பூனை கலகலவென சிரித்தது.  அரசர்களின் முன்னால் உலகம் தோன்றியதிலிருந்தே இதுவரை எந்தப் பூனையும் சிரித்ததில்லை அதனால் அரசனுக்கு கடும் கோபம் வந்து விட்டது அதனால் விசாரனை ஏதும் இன்றியே பூனைக்கு மரணதண்டனை விதித்தான்.


   காவலர்கள் பூனைக்கு  மரண தண்டனை வழங்க தயாராகும் போது,  " மன்னா ஒரு நிமிடம் " என்று பூனை சொன்னது  , அரசனும் கொஞ்சம் பொறுங்க என்று காவலர்களுக்கு கட்டளையிட்டான்.


   தலையில் மூன்று முடி மட்டுமல்ல எத்தனை முடி நேராக இருந்தாலும் அவன் அறிவாளி என்று முடிவு செய்துவிட முடியாது என்று சொல்லி சிரித்தது.  அரசனுக்கு மந்திரியின் பேச்சை தன் முன்னாலேயே கேலி செய்வதைப் பார்த்து இன்னும் கடுமையாக கோபம் வந்துவிட்டது அதனால் பூனைக்கு மரண தண்டனையை உடனடியாக நிறைவேற்ற உறுதியாக இருந்தார்.


    இனி இந்த உலகில் இருக்கும் பூனைகளுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும் என்று  அரசன்  சொன்னான். காவலர்கள் பூனைக்கு மரண தண்டனை நிறைவேற்ற வாளுடன் நின்றார்கள்.


   மூன்று முடி மட்டும் அல்ல எத்தனை முடி நேராக இருந்தாலும் அவன் அறிவாளி என்று சொல்ல முடியாது இதை நிரூபிக்க எனக்கு ஒரு வாரம்  அவகாசம் தந்தால் நான் நிரூபிப்பேன் பிறகு என்னை கொன்றுவிடுங்கள் என்று சொன்னது பூனை.


   அரசனும் சிரிக்கத் தெரிந்த பூனை இந்த உலகில் ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது எனவே அதனுடைய பேச்சையும் கேட்கலாம் என்று முடிவு செய்து தண்டனையை ஒரு வாரத்திற்கு தள்ளி வைப்பதாக அறிவித்தார்.  பிறகு பூனையிடம் எப்படி நிரூபிப்பாய் என்று கேட்டார் .


  அதை நிரூபிக்க மந்திரிக்கு மொட்டை அடிக்க வேண்டும் என்று பூனை சொன்னது. அரசரும் நீண்ட தயக்கத்திற்கு பிறகு ஒத்துக் கொண்டார்.  எளியவர்களின் குரலுக்கு ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் செவி கொடுப்பது தான் உலகின் மாபெரும் அதிசயம்.  பூனையின் வேண்டுகோளை ஏற்று மந்திரிக்கு மொட்டை அடித்தனர்.


  இந்த உலகத்தில் நடக்கும் ஏதேனும் ஒரு அதிசய செய்தியை யாருக்கும் முன்பாக என்னிடம் சொன்னால் உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லி இருந்த தன் காதலியிடம்  சிரிக்கும் பூனையைப் பற்றி காவலன் சொன்னான் . அவளும் தான் திருமணம் செய்யப் போகிறவனின் வீர பிரதாபங்களோடு இதையும் சேர்த்து தன் தோழிகளிடம் கூறி விட்டாள்.


   வழிப்போக்கர்களும் மீண்டும் பூனைகள் விளையாடிய இடத்திற்கே வந்து வேறு ஏதாவது பூனைகள் சிரிக்கிறதா என்று பார்க்க நெடு நேரமாய்க் காத்துக் கொண்டு இருந்தார்கள். அதனால் அவர்களைத் தேடி இருவரின் மனைவிகளும் அங்கு வந்தனர். ஆர்வக்கோளாரில் அவர்களும் தங்கள் மனைவிகளிடம் சிரிக்கும் பூனையைப் பற்றி இரகசியமாகச் காதில் சொல்லிவிட்டார்கள்.  இச்செய்தி அவரவர்களுக்குப் பிடித்தமானவர்களிடம் இரகசியம் என்றே பரவியது.


   நான்கு நாள் கழித்து அரசவை கூடியது மத்திரிகள், பூனை என அனைவரும் கூடினர். அரசர் பூனையை நீ சொன்னபடி  நிரூபி என்றார்.
மன்னா மந்திரியின் தலையில் இப்போது எல்லா முடிகளும் நேராகத் தான் உள்ளன அப்படி என்றால் அவர் அறிவாளியா என்று கேட்டது பூனை.


   இதிலென்ன சந்தேகம் அவர் அறிவாளிதான் என்றார் அரசர். என்னை இங்கு அழைத்து வரும் முன் இரகசியம் ஒன்றை  காக்கும் படி மூன்று பேரிடம் அவர் சொன்னார் . அது இன்று நாட்டில் உள்ள எல்லோருக்கும் தெரிந்துவிட்டது பல பேரிடம் சொல்வது எப்படி இரகசியம் ஆகும்- என்று கேட்டது பூனை.


  இது உண்மையா என மந்திரியிடம் அரசர் கேட்டார், பிறகு அந்த இரகசியம் காப்பாற்றபடவில்லை என்று எப்படி சொல்கிறாய் என்றார் அரசர்.


   என்னைப் (சிரிக்கும் பூனை) பற்றிய செய்தி " நாடு முழுவதும் பரவிவிட்டது என் சிரிப்பைப் பார்க்க ஆயிரக் கணக்கான மக்கள் அரண்மனை வாசலில் இந்நேரம் கூடி இயிருப்பார்கள் என்றது பூனை.

  காவலர்களை அனுப்பி பார்த்து வரச் சொன்னார் அரசர். மக்கள் கூட்டம் ஆரவாரத்தோடு அலைமோதியதை அறிந்த அரசர் பூனனயின் அறிவைக் கண்டு வியந்தார் . தன் அமைச்சரை விட பூனை அறிவாக இருந்தாலும் இனிமேல் பூனைகள் சிரிக்கக் கூடாது என்று கட்டளையிட்டார். பிறகு பூனையை விடுதலை செய்தார்.


   பூனை மனதுக்குள்ளே சிரித்துக் கொண்டு துள்ளி குதித்து ஓடியது. அதன் பிறகு அரசர் பூனைகளின் அறிவின் மீது பயம் கொண்டு பூனைகள் சிரிப்பதைத் கண்காணித்து தடுத்து தண்டனைத் தருவதற்கு ஒரு படையை நியமித்து தண்டமாக சம்பளம் கொடுத்தார்.


   
பிறகு  எல்லா  பூனைகளுமே யாருக்கும் தெரியாமல்  சிரிக்கக் கற்றுக் கொண்டன.  பூனைகள் அரசனின் மந்திரிகளின் முட்டாள்தனத்தைப் பார்த்து இன்று வரை மனதுக்குள்ளே சிரித்தபடியே தான் இருக்கின்றன.




0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home