வெயில் ஒளிந்து கொள்ளும் அழகி
சமகால கவிதை நூல்கள் பற்றி - மெளனன் யாத்ரிகா - அவர்கள் எழுதும் தொடர் .
சமகாலத்தைப் பொருட்படுத்துவேன்
_____________________________________
3.
நூல்-வெயில் ஒளிந்து கொள்ளும் அழகி
கவிஞர்- பூவிதழ் உமேஷ்
சென்ற மாதத்தில் ஒருநாள் லேசாக வெக்கை ஏறிய ஒரு மதியப் பொழுதில் நண்பர் அகரமுதல்வனிடம் இருந்து மெசஞ்சரில் ஓர் அழைப்பு வந்தது. இலக்கியம் குறித்து கொஞ்சம் உரையாடிய பிறகு, பேச்சின் ஊடாக சமகால கவிதைகள் குறித்துப் பேசினோம்.
அவருக்கு நெருக்கமான கவிஞர்கள் குறித்தும் கவிதைகள் குறித்தும் பேசிக் கொண்டிருந்தவர் அண்மையில் ஒரு கவிதைத் தொகுப்பு வந்திருக்கிறது, ரொம்ப பிரமாதமாக எழுதப்பட்டிருக்கிறது என்றார்.
என்னால் சட்டென்று அவதானிக்க முடியவில்லை. யாருடைய தொகுப்பாக இருக்கும் என்று நான் யோசித்துக் கொண்டிருக்கும் போது,
பூவிதழ் உமேஷ் என்பவருடைய 'வெயில் ஒளிந்து கொள்ளும் அழகி' என்றார்.
அகரமுதல்வனுடைய வாசிப்பு ரொம்ப ஆழமானது என்று எனக்கு தெரியும். வாய்ப்பிருந்தால் என்னுடைய 'நொதுமலர் கன்னி' குறித்து அவர் பேசிய நிகழ்வின் வீடியோ பதிவைக் கொஞ்சம் கேட்டுப் பாருங்கள். ஒரு தேர்ந்த வாசகன் ஒரு நூலை எப்படி அணுகுவான் என்பதற்கு அந்தப் பேச்சு அருமையான உதாரணமாக இருக்கும்.
என்னைக் குறித்தும், அகரமுதல்வன் குறித்தும் பேசுவதற்காக இந்த விஷயத்தை நான் சொல்லவில்லை. பூவிதழ் உமேஷின் கவிதைகள் குறித்து பேசவே இந்த சின்ன அறிமுகம்.
பூவிதழ் உமேஷின் மொழி, அவர் கவிதைகள் பேசும் தொனி, அவர் தேர்ந்து கொண்ட உள்ளடக்கம், அவருடைய கவிதை நிகழும் காலம்... இப்படி பல விஷயங்களை அந்தத் தொகுப்பை முன் வைத்துப் பேசினார். எனக்கு உண்மையில் ஆவல் தொற்றிக்கொண்டது. உடனே வெயில் ஒளிந்து கொள்ளும் அழகியைப் படிக்க வேண்டும் என நினைத்தேன். அதற்கான வாய்ப்பு சட்டென அமையவில்லை.
ஒருநாள் பூவிதழ் உமேஷிடமிருந்து ஒரு போன். அண்ணா உங்கள் முகவரி கொடுங்கள் என்று. கொடுத்தேன். இரண்டொரு நாளில் வெயில் ஒளிந்துகொள்ளும் அழகி என் வீட்டிற்கு வந்துவிட்டாள். வந்த நாளிலிருந்து அந்த அழகியை என் ஜோல்னா பையில் வைத்துக்கொண்டு அலைகிறேன்.
ஆயிரம் கற்களைத் தாவி ஏறி மலை உச்சியில் இருக்கும் ஒரு மரத்தில், அதன் நிழலில் இளைப்பாற அமர்வது போல ரொம்ப கடுமையான வாசிப்பனுபவத்தைக் கோருகிறது இந்த நூல். அதிகம் குழந்தைகள் உலாவும் ஒரு மைதானம் போல் தெரிந்தாலும், மைதானம் இருப்பது என்னவோ மலையுச்சியில். அங்கு போய் விளையாடுவது என்பது ஒரு அசகாய சூர பயணம். நம்மை அந்த சாகச விளையாட்டுக்குத்தான் அழைக்கிறார் பூவிதழ்.
முதல்கட்ட வாசகன், வளர்ந்து வரும் வாசகன், தீவிர வாசகன், யோகநிலையை எட்டிவிட்ட வாசகன் என்று வாசக பரப்பில் பல வாசகப் படிநிலைகள் இருக்கின்றன. இந்த நூல் முதல்கட்ட வாசகனை அடிவாரத்திலேயே தயங்கி நிற்க வைத்து விடுகிறது.
கவிதையின், அது பேசும் மொழியின் , அதன் உள்ளடக்கத்தின் செறிவு ரொம்ப அடர்த்தியானதாக இருக்கிறது. தேர்ந்த வாசகன் அல்லது தீவிர வாசகனே மலை ஏற முடியும். அவ்வளவு அடர்த்தியான மொழி, உயரமான சொல்முறை.
நான் ஒருவார காலமாக தொடர்ச்சியாக வாசித்துக் கொண்டிருக்கிறேன். பூவிதழ் உமேஷின் இந்தத் தொகுப்பு ஒரு மலையேற்றத்தை எனக்கு ஞாபகப்படுத்துகிறது. என்னுடைய வாசிப்பு அனுபவத்தில் கவிதை குறித்து நான் புரிந்து வைத்திருப்பது, 'யாரும் தொட முடியாத, யாரும் அணுக முடியாத வாழ்வையும் பொருளையும் நெருக்கமாக அவதானிப்பது. அது இந்தத் தொகுப்பில் சாத்தியமாகியிருக்கிறது. நிறைய கவிதைகளை இந்நூலில் இருந்து உதாரணம் காட்ட முடியும். அந்த வாய்ப்பை வாசகர்களுக்கே நான் கொடுத்துவிட விரும்புகிறேன்.
நன்றி: கவிஞர் மெளனன் யாத்ரிகா
( பாணர் வகையறா , புத்தர் வைத்திருந்த தானியம், நொது மலர்க் கன்னி உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர் இவருடைய நூல்கள் வாசகசாலை , தாழ்வாரம் ஆகிய அமைப்புகளின் விருதுகளைப் பெற்றுள்ளன. )



0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home