Sunday, 1 April 2018

கவிதை


 வாசனையான மீன்கள்  

விளையாட  போக்கிடமோ உலவிடமோ அற்ற 
அடுக்குமாடி குடியிருப்புகளை  
சில நிறங்களிலேயே ஓவியமாக்கி விடலாம்

மனதுக்குள் ஓவியங்களை நுழையவிடுவதும் 
ஓவியங்களுக்குள் நுழைவதும் ஒன்றுதான் 

சுவர்களெங்கும் ஓவியங்கள் உள்ள வீட்டில்
நிறைய தெருக்கள் உள்ளன 
அது கால்களுக்குப் பதிலாய்  
கண்கள்  நடக்கும்  தெருக்கள்  

சிறுமிகள் பாண்டியாடும் ஓவியத்தில் நுழைந்தவள் 
சிரித்து சிரித்து குதுகலிக்கிறாள்
வண்ணத்துப் பூச்சியின் மஞ்சளைப் பூசிக்கொள்கிறாள்
விரல்கள் கதைபழகும் 
மடிநிறைய கூழாங்கற்கள் 

சிறுவர்கள் ஊஞ்சலாடும் ஓவியத்தில் குதிப்பவன் 
ஒவ்வொரு விழுதாக ஆடுகிறான்
ஆலம் பழ முச்சுவையில் ஆழ்கிறான் 
பறவைகளின் சினேகம் கூடிய
கை நிறைய அழகிய இறகுகள் 

நீராடும் குளம் ஒன்றில் இறங்கும் அம்மா
தாமரையை உச்சி முகர்கிறாள்
மெல்லிய ஆடை சரியச் சரிய 
நீராக மாறும் சாபம் பெறுகிறாள்
அவள் உடலைக் கடக்கும் மீன்கள்
Remy பர்ப்யூம்  வாசனையானவை 

கடந்த காலம் மீட்பதில் சாயல்கள் அலாதியானவை 
தந்தை சாயலில் உழவு மாடுகளோடு உள்ள 
ஓவியத்தில் நுழையும் அப்பா 
மேழியைப் பிடித்தபடி ஏர்க்குச்சியை வாங்குகிறார் 
காற்றில் பறந்த புழுதி மண்ணுக்கு
ஏழாவது சுவை 

வரவேற்பு மேசையில் வைத்த
இனிப்புகளையும் பலகாரங்களையும் ஓவியத்திற்குள்ளேயும் பரிமாறுகிறார்கள் 

ஓவியத்திலிருந்தவர்கள் தெரு முனை வரை வந்து 
வழியனுப்புகிறார்கள் 
அவர்கள் சென்ற பின்பு 
ஓவியங்கள் முன்னிலும் அழகாக இருப்பதை 
நீங்கள் உட்பட எல்லோரும் உணரத்தொடங்கினர் . 



0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home