மாய நிலம் _ 3
மாய நிலம் -3
மரப்பெண்
சிறிது தூரம் நடந்து சென்றதும் பிரசவ வலி அதிகமானது. எது எந்த திசை என எதுவும் அவளுக்குப் புரியவில்லை. அவளுக்கு நேர் எதிர் திசையில் முன்பு அவளும் அவள் கனவனும் உருவாக்கிய குடில் தெரிந்தது. அதை அடைந்து தட்டுத்தடுமாறி உள்ளே சென்றாள். பொழுது சாய்ந்து சூரியன் மறைந்து விட்டது.
சற்று நேரத்தில் வீரிட்டுக் கத்தியபடி ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். நீண்ட நேரமாக மயக்கத்தில் இருந்தாள். அவளின் வீறிட்ட சத்தம் கேட்ட மேகம் ஒரு மின்னலை அனுப்பி நடந்ததைப் பார்த்து வருமாறு அனுப்பியது.
மயங்கிக் கிடந்த தாயையும் இருட்டில் அழுதுகொண்டு இருந்த குழந்தையையும் பார்த்து மின்னல் கலங்கிப் போனது.
தன் வெளிச்சமான விரல்களால் குழந்தையை மெல்ல தொட்டுப் பார்த்தது. மின்னலின் ஒளி குழந்தையின் உடலில் ஊடுருவியது. மாய ஆற்றலை குழந்தை பெற்றது.
மின்னல் அவ்வப்போது வந்து, இரவுகளில் தனியே குழந்தையைப் பார்த்தது. ஒரு நாள் திடீரென குழந்தையின் அம்மா விழித்து விட்டாள். மின்னல் தனது கதையைச் சொன்னது.
மின்னல் வானத்தில் நீண்ட நேரம் ஒளியாக இருக்கப் பிறந்ததாகக் கூறியது. அப்படி வானத்தில் ஒளிர்ந்து கிடந்த ஒரு நாள் பூமி எங்கும் நனையும் அளவுக்கு மழை பெய்தது. எல்லா பொருள்களும் ஈரம் ததும்ப இருந்தன. சமைக்க எங்குமே விறகு கிடைக்கவில்லை. ஒரு பெண் விறகு என நினைத்து என்னை ஒடித்தாள் கோவப்பட்ட நான் அவள் உயிர் போக காரணமாகி விட்டேன்.
அவள் இறக்கும் முன் அவள் கதையைச் சொன்னாள்.
உலகம் தோன்றிய புதிதில் மனிதர்களைப் போலவே மரங்களும் குழந்தைகளைப் பெற்றெடுத்தன. காலப்போக்கில் மனிதர்கள் தங்கள் சுயநலத்திற்காக இப்போது போலவே மரங்களை வெட்டத் தொடங்கியதும் குழந்தைகளைப் பெற்றுத் தரும் மரங்களே பூமியில் இல்லாமல் போனது.
அப்படிப்பட்ட ஒரு மரத்துக்குப் பிறந்த கடைசி குழந்தை நான் தான். அப்படித் தான் நான் வளர்ந்தேன் . ஒரு நாள் என் தாய் மரத்தை யாரோ நான்கு பேர் சேர்ந்து வெட்டி சாய்த்தனர்.
என் கண் எதிரே சாய்ந்து வீழ்ந்து கிடந்த என் அம்மாவைப் பார்த்து கதறி அழுதேன். திடீரென காட்டில் அழுகை சத்தம் கேட்டு திரும்பி பார்த்த அந்த நான்கு பேரும் என் அருகில் வந்து நடந்ததை அறிந்து கொண்டனர்.
பிறகு, நால்வரும் ஒரே குரலில் என்னிடம் " இனிமேல் நீ எதற்கும் கவலைப்பட வேண்டாம் எங்களுக்கு நீ தான் தங்கை " எனக் கூறி உறுதி அளித்து என்னை அவர்களுடனே அழைத்துச் சென்றனர். ஒவ்வொரு நாளும் என்னைக் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டனர்.
அவர்களோடு மகிழ்ச்சியாக வாழ்ந்த போது நாள், மாதம், வருடம் போவதே தெரியாமல் வளர்ந்து பெரியவளானேன்.
எனக்குத் திடீரென உடல் நலம் சரியில்லாமல் போனது. எந்த மருந்து சாப்பிட்டும் பல மருத்துவர்கள் பார்த்தும் என் உடல் குணமாகவே இல்லை. நான் ஒரு வாய் சாப்பாடு கூட சாப்பிட முடியாமல் படுத்த படுக்கையாகிவிட்டேன். நான்கு அண்ணன்களும் என்னைச் சுற்றி கவலையோடு அமர்ந்து இருந்தனர். திறந்த வீட்டில் இப்படி அமைதி நிலவ நான்கு பேர் அமர்ந்து இருப்பதைப் பார்த்த தெருவில் மோர் விற்கும் கிழவி ஒருத்தி வீட்டிற்குள்ளே வந்தாள். என் நெற்றி தடவி நாடி பிடித்துப் பார்த்து ஒரு வைத்தியம் சொன்னாள்.
மோர் விற்கும் கிழவியை வீட்டிற்கே வந்த தெய்வம் போல் பார்த்தனர். அவள் சொன்னதை கவனமாகக் கேட்டனர்.
கிழக்கே நூறு மைல் தூரத்திற்கு அப்பால் சூரியன் புறப்படும் இடத்தில் ஒரு குளம் இருக்கிறது அந்தக் குளத்தில் ஒற்றை தாமரை பூக்கும் நாளில் குளத்தின் தண்ணீரைக் கொண்டு வந்து கொடுத்தால் இவள் உடம்பு குணமாகி விடுவாள்.
செல்லும் போது இவளுடைய ஏதாவது ஒரு ஆடையை எடுத்துச் சென்று குளத்தில் நனைத்து எடுத்து வர வேண்டும் அதை உடுத்தி குளத்து தண்ணீரைப் பருகினால் பழைய உடலையும் நலத்தையும் பெற்று விடுவாள்.
வரும் வழியில் எத்தனையோ சத்தங்களும் குரல்களும் கேட்கும் அதைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தால் பார்ப்பவர்கள் பேசும் தன்மையை இழந்து விடுவார்கள் என்று கிழவி கூறி முடித்தாள்.
கிழவி கூறியதைக் கேட்ட நால்வரும் கண்களில் கண்ணீர் பெருக தங்கையிடம் விடை பெற்றனர். கிழக்குத் திசை நோக்கி புறப்பட்டனர்.
நாள்கள் பற்றிய கணக்கு ஏதுமின்றி பயணித்தனர். பூமி எங்கும் மஞ்சள் வெயில் படர்ந்திருந்த நீண்ட பகல் இருந்த ஒரு நாளில் குளத்தை அடைந்தனர். குளம் எங்கும் தாமரைப் பூக்கள் பூத்திருப்பதைப் பார்த்து இத்தனை பூக்கள் இருக்கும் குளம் எப்போது ஒற்றைத் தாமரையைப் பூக்கும் என எண்ணி மனம் ஒடிந்து போனார்கள்.
ஆளுக்கு ஒரு கரையில் தவம் இருப்பது போல இரவு பகல் பாராமல் காத்திருந்தனர். அவர்களின் கண்களுக்கு சுற்றி நடந்த எந்த காட்சிகளும் தெரியவில்லை. காதுகளுக்கு சுற்றி நடக்கும் எந்த ஒலியும் கேட்கவில்லை. இப்படியே நாள்கள் குளம் நிறைய தாமரை பூக்கவே கடந்தன.
சூரியன் சரியாக கிழக்கில் உதித்த ஒரு நாளில் குளத்தில் ஒற்றைத் தாமரை பூத்தது. நான்கு பேரும் உயிர் வந்தது போல் மகிழ்ந்தனர்.
தாமரையைப் பறிக்க குளத்தின் உள்ளே இறங்க சென்ற போது , அங்கு கரையில் அமர்ந்திருந்த தவளை ஒன்று அவர்களைத் தடுத்தது.
இந்தக் குளம் எனக்குச் சொந்தமானது. என்னைக் கேட்காமல் உள்ளே யாரும் போகக் கூடாது எனத் தடுத்து நிறுத்தியது.
posted by பூவிதழ் @ May 22, 2018
0 Comments



