எலோனா பந்தை எடுப்பதற்காக தோட்டத்தின் உள்ளே சென்றாள். அவள் கண்களை அவளால் நம்பவே முடியவில்லை. எத்தனை விதமான பூக்கள் அங்கு பூத்து இருந்தன இவ்வளவு நேரம் எப்படி தெரியாமல் போனது ? என்று யோசிக்கும் போதே அவள் தம்பியும் வந்துவிட்டான் . இருவரும் உள்ளே செல்ல செல்ல உலகின் அழகான தோட்டமாக இருந்தது. எல்லாவற்றையும் இரசித்தபடி நீண்ட தூரம் வந்துவிட்டார்கள். இப்போது திரும்பி செல்லும் வழியே மறந்துவிட்டது.
அங்கே ஒரு கிழவி மரத்தடியில் அமர்ந்து இருந்தாள். அவள் ஒரு மோசமான சூனியக்காரி. இருவரும் அவளிடம் சென்றார்கள். தோட்டத்தில் இருந்து திரும்பி செல்லும் வழியை மறந்துவிட்டதாக சொன்னார்கள். கிழவி சிரித்தபடியே சொன்னாள். கவலை படாதிங்க நான் உதவி செய்கிறேன். பொழுது இருட்டிவிட்டது. இரவு இங்கேயே தங்கிவிடுங்க நாளைக்கு நானே உங்களை அனுப்பி வைக்கிறேன் என்றாள்.
சூனியக்காரி முழுநிலவு நாளில் குழந்தைகளை கொன்று சாப்பிடுவாள். அதற்காகத்தான் அவர்களை மாய பூந்தோட்டம் வழியே மயக்கி வரவைத்து இருக்கிறாள். நீமுவை எப்படியாவது சாப்பிட வேண்டும் என பேராசை கொண்டாள். முழுநிலா நாளுக்கு இன்னும் நான்கு இரவுகள் உள்ளன.
அவள் கொடுத்த உணவை சப்பிட்டுவிட்டு குழந்தைகள் தூங்கினார்கள். தன் ஆசையை நிறைவேற்ற எப்படியாவது அவர்களை இங்கேயே தங்க வைக்க திட்டம் போட்டாள் சூனியக்காரி. அதற்காக விடியும் நேரத்தில் சிறுவனை ஒரு கூழாங்கல்லாக மாற்றி வீட்டிற்கு வெளியே போட்டுவிட்டாள் .
தூங்கி எழுந்ததும் தன் தம்பி காணாமல் போனதால் எலோனா அழத்தொடங்கினாள். அழுவது போல சூனியக்காரியும் நடித்தாள். வெளியில் சென்று தேடினார்கள். எங்கும் காணவில்லை .
காகம் ஒன்று தாகத்தில் தண்ணீர் தேடி அலைந்தது. இறுதியில் சூனியக்காரி வீட்டின் வெளியே இருந்த பானையைக் கண்டது. அதில் தண்ணீர் கொஞ்சமாக இருந்தது. அருகில் இருந்த கூழாங்கற்களைக் எடுத்து எடுத்துப் போட்டது. இறுதியில் கல்லாக மாற்றியுள்ள சிறுவனை மட்டும் காகத்தால் எடுக்க முடியவில்லை எனவே அதைக் கொத்தியது. கல்லில் இருந்து இரத்தம் வந்ததும் காகம் அதிர்ந்து போனது.
சிறுமி அழுதபடியே வந்தாள். காகத்திடம் எங்கேயாவது என் தம்பியைப் பார்த்தாயா என்று கேட்டாள். காகத்திற்கு புரிந்துவிட்டது. அவள் தம்பிதான் கூழாங்கல்லாக இருப்பதாகச் சொன்னது. பின்பு காகம் கா... கா.. என்று கரைய ஆரம்பித்தது. ஆயிரக்கணக்கான காகங்கள் ஒன்றாக கூடி கரைந்தன. எங்கும் ஒரே சத்தம் . வானத்தில் இருந்து ஒரு தேவதை கீழே வந்தது. நடந்ததைக் கேட்டு அறிந்தது. பின்பு கல்லை சிறுவனாக மாற்றியது . அற்குள்ளாக சூனியக்காரியும் வந்துவிட்டாள். நீமு உன்னை எங்கெல்லாம் தேடினோம் யார் உன்னை இப்படி செய்தது என்று சொல்லி நடித்தாள்.
இரவாகிவிட்டது இப்போது போனால் வீட்டிற்குப் போக முடியாது. காலையில் போயிடுங்க என்று சொல்லி அவர்களை அழைத்துச் சென்றாள் சூனியக்காரி. இருவரும் களைத்துப்போய் தூங்கினார்கள். சூனியக்காரி விடியும் முன்பே எழுந்தாள். சிறுவனை மக்கா சோளக்கதிராக மாற்றிவிட்டாள். கண் விழித்ததும் தன் தம்பியை மீண்டும் காணததால் எலோனா கதறி அழுதாள் . எங்கெங்கோ தேடினாள் எங்குமே காணவில்லை. நீமு நீமு என்று சொல்லிக்கொண்டே நடந்தாள்.
பால் ஏறிய சோளக்கதிர்களை கொத்திக்கொண்டு இருந்த குருவிகள் எலோனாவின் அழுகை கேட்டுத் திரும்பின. என் தம்பி நீமு வை யாராவது பார்த்தீர்களா ? என்று கேட்டாள். அதைக் கேட்டபடியே ஒரு கதிரைக் கொத்திய குருவி கீச்கீச் என கத்தியது. எல்லா குருவிகளும் மிரண்டு போய் அலறின பறந்தன . அந்தச் சோளக்கதிரில் இருந்து இரத்தம் வழிந்தது.
இரத்தத்தைப் பார்த்த ஒளியா இது என் தம்பி நீமு என்று கூறி ஓ! என கத்தி அழுதாள். அதற்குள்ளாக எல்லா குருவிகளும் கூடிவிட்டன. குருவிகளும் அழத் தொடங்கியதால் வானத்தில் இருந்த தேவதை வந்தது . நீமுவை மீட்டுக் கொடுத்தது. சூனியக்காரி வேகவேகமாக ஓடி வந்தாள் .
ஐயோ நீமு நீ எங்களை விட்டு எங்குதான் போய் விடுகிறாய் ? இனிமேல் எங்கு போவதாக இருந்தாலும் உன் அக்காவையும் கூட்டிக்கொண்டு போ . உன்னைத் தேடி தேடி எங்கெல்லாம் செல்வது ? இப்போதும் பார் இருட்டிவிட்டது உங்களை எப்படி அனுப்புவது? என்று நயமாகப் பேசி நடித்தாள். பிறகு அவர்களைக் கூட்டிக்கொண்டு வீட்டிற்கு சென்றாள்.
இந்த இரவு மட்டும் விழித்தபடியே இருந்தால் காலையில் வீட்டிற்கு சென்றுவிடலாம் என்று நினைத்து இருவரும் தூங்காமலே இருந்தனர். சூனியக்காரி தூங்குவது போல நடித்தாள். ஆனால் இருவரும் நடு யாமத்தில் தூங்கிப்போனார்கள்.
கடந்த இரண்டு முறையும் இரத்தத்தை வைத்துதானே இவள் நீமுவைக் கண்டுபிடிதாள் அதனால் இந்த முறை எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நினைத்தாள் சூனியக்காரி . நீமுவை இயற்கையகவே உள்ளே சிவப்பாக இருக்கும் கொய்யாவாக மாற்றி விட்டு படுத்துக் கொண்டாள்.
எலோனா நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். அவள் சந்தேகப்பட கூடாது என்பதற்காக சூனியக்காரி அழுவது போல நடித்துக் கொண்டு எலோனாவை எழுப்பினாள். நீமுவை காணவில்லை வா இருவரும் போய்த் தேடலாம் என்று அவசர அவசரமாக வெளியே கூட்டிச் சென்றாள். ஆளுக்கு ஒரு திசையில் சென்று தேடினார்கள்.
சூரியன் மேற்கில் சாய்ந்தது. கிளிகள் எல்லாம் கீச்சிட்டு கூடு திரும்பிக் கொண்டு இருந்தன. தன் குஞ்சுகளுக்காக கடைசியாக ஒரு கொய்யா பழத்தைக் கொத்தியது ஒரு கிளி . அது போன்ற ஒரு சுவையன பழத்தை இதுவரையில் சுவைக்காத கிளி அதைத் தன் குஞ்சுகளுக்கு எடுத்து செல்ல எவ்வளவோ முயன்றது ஆனால் முடியவில்லை. அதற்குள்ளாக வேறு பல கிளிகளும் வந்து கீச்சிட்டன . சத்தம் ரொம்ப அதிகமாகியும் யாராலும் கொத்த முடியவில்லை . இதில் ஏதோ மர்மம இருக்கிறது என்று வானத்து தேவதையிடம் முறையிட்டன. தேவதை கொய்யா பழமாக இருந்த நீமுவின் பழைய உருவத்தைத் தந்தது. நீமுவை இனி ஒரு நொடி கூட பிரியக் கூடாது என முடிவு செய்தாள் எலோனா.
அங்கு வந்த சூனியக்காரி நீமுவுக்காக முதலைக் கண்ணீர் வடித்தாள். நீமு இப்படி தினமும் காணமல் போய் விடுவதால் என் நிம்மதியே போய்விட்டது.பகலெல்லாம் காணாமல் போய் விடுகிறாய் என்று நீலி கண்ணீர் வடித்தாள். மேலும் வீட்டிற்கு உள்ளே படுப்பதால்தான் இரவில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை அதனால் இன்று நிலா வெளிச்சத்தில் படுத்து காலையில் உங்கள் வீட்டிற்கு போய்விடலாம் என அவர்கள் மீது கரிசனம் உள்ளவள் போல கூறினாள்.
கோடை நிலா அழகாக காய்ந்தது. வானத்தில் ஏதோ திருவிழா நடப்பது போல இருந்து. வெளிச்சம் ஒரு பாதுகாப்பு உணர்வைத் தருவது போல தோன்றியது அதனால் சீக்கிரமாகவே தூங்கினார்கள். எலோனா தன் தம்பியை இறுக்கமாகப் கட்டிப் பிடித்துக் கொண்டு தூங்கினாள் .
சூனியக்காரி எப்படியாவது ஒரு இரவை கடந்துவிட்டால் போதும் அடுத்து முழுநிலா நாள் வந்துவிடும் என்று நினைத்தாள். ஆனால் இந்த முறை எலோனா கண்டுபிடிக்காத படி ஏதாவது செய்ய வேண்டும் என திட்டம் தீட்டினாள். எளிதில் கண்டு பிடிக்காதபடி இரவோடு இரவாக நீமுவை குளத்தின் கரையில் இருந்த கோரைப் புல்லாக மாற்றிவிட்டாள்.
நான்காவது நாளாக நீமு காணமல் போனதால் எலோனாவுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை அதனால் எனக்கு மட்டுமாவது வழியைக் காட்டு என் பெற்றோரை அழைத்து வந்து நீமுவை நான் தேடிக்கொள்கிறேன் என்றாள் . இதை சற்றும் எதிர்பாராத சூனியக்காரி ஒரு நொடி திகைத்துப் போனாள் . நீ சொல்வதும் சரிதான் இந்த பூந்தோட்டம் தான் உங்களை இங்கு வரவைத்தது எனவே இதை அழித்து விடுகிறேன். இன்று மட்டும் தேடலாம் நீமு கிடைக்கவில்லை என்றால் உன் சொற்படியே நடக்கிறேன் என்று கூறி நடித்தாள். வழக்கமாக தேடிச் செல்வது போல சென்றாள்.
பாய் பின்னும் தொழிலாளி ஒருவன் இந்த வறண்டு போன கோடையில் எங்கும்
கோரைப் புற்கள் கிடைக்காததால் வெயிலில் அலைந்து திரிந்து கொண்டிருந்தான். பிறகு ஒரு குளக் கரையில் மட்டும் செழிப்பான கோரைகள் வளர்ந்து இருப்பதைப் பார்த்து ரொம்ப மகிழ்ச்சி அடைந்தான். மரத்தடியில் கொஞ்ச நேரம் படுத்து ஓய்வு எடுத்துவிட்டு அறுக்கலாம் என்று இருந்தான். நீமுவைத் தேடிவந்த எலோனா மரத்தடியில் ஒரு மனிதனைக் கண்டதும் ஆறுதல் அடைந்தாள். நீமுவை எங்கேயாவது பார்த்தீங்களா என்று கேட்டு தன் கதையைச் சொன்னாள்.
திடீரென கோரைப் புற்கள் எல்லாம் வாடிப் போய் இருந்தன. அதைப் பார்த்த பாய் வியாபாரி அதிர்ந்து போனான். அவன் அறுக்கப் போன போது எலோனா இருந்த பக்கமே கோரை எல்லாம் சாய்ந்தன. காற்று மெல்ல கூட வீசவில்லை. அவள் எந்தப் பக்கம் போகிறாளோ அந்தப் பக்கம் கோரைகள் எல்லாம் சாய்ந்தன. பாய் வியபாரிக்குப் புரிந்துவிட்டது நீமு கோரையாகத்தான் இருக்கிறன் என்று. எப்படி நீமுவை மீட்பது எனத் தெரியாத வியாபாரி தன்னையே நொந்துகொண்டான்.
தனித்து வருந்தும் சிறுமிகளுக்கு உதவாத தேவதைகள் இல்லாமல் போகட்டும் என்று கோவமாகச் சொன்னான் . உலகின் எல்லோருக்கும் கனவுகளை தருபவன் பாய் வியாபாரி தான் அவன் வசைக்கு ஆளாக கூடாது என தேவதை ஓடோடி வந்த்து. கோரையில் இருந்து நீமுவை மீட்டது. அதற்குள்ளாக சூரியன் சாய்ந்துவிட்டது. பாய் வியாபாரி சூனியக்காரியைப் பற்றி சொன்னான் .
வியாபாரியை எலோனாவுடன் இருந்து சூனியக்காரி என்ன செய்கிறாள் என்று கவனிக்கச் சொன்னது. மேலும் அவளை அவள் வழியிலேயே ஏமாற்ற வேண்டும் . எலோனா வீட்டிற்கு செல்வதாகச் சொல்லி அவளிடம் ஏதேனும் பெற்று செல்ல வேண்டும் என்றும் சொல்லி மறைந்தது தேவதை . வேக வேகமாக சூனியக்காரி ஓடி வந்தாள் இந்த இரவை எப்படியாவது கடந்தால் நாம் நினைத்தது நடந்துவிடும் என்று தவித்தாள் .
சூனியக்காரி எலோனாவை கூப்பிட்டாள் அவள் வர மறுத்து வியபாரியுடன் தான் வருவேன் என்று அடம்பிடித்தாள். வியாபாரி உடன் வருவதாக இருந்தால் ஒரு வார்த்தையும் பேசக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்து அழைத்துச் சென்றாள்.
எல்லோரும் தூங்கப் போனார்கள் வியாபாரி மட்டும் தூங்குவதாக நடித்தான். என்ன செய்தால் யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்று சூனியக்காரி தீவிரமாக சிந்தித்தாள். இந்தமுறை நீமுவை குளத்து தண்ணீராக மாற்றிவிட்டாள். வியாபாரியும் தூங்குவது போல நடித்து இதை தெரிந்து கொண்டான் .
கண் விழித்ததும் நீமுவை காணாத எலோனா அழத் தொடங்கினாள் . வியபாரியைக் கூட்டிக் கொண்டு தேடினாள் எங்குமே காணவில்லை . தேவதை சொன்ன திட்டப்படி நான் என் வீட்டிற்கு போகிறேன் என்று சொன்னாள் . பிறகு சூனியக்காரியிடம் என்ன வாங்கி செல்வது என்று தெரியாமல் தவித்தாள் . இதை புரிந்து கொண்ட வியாபாரி கொஞ்சம் தண்ணீர் குடித்தான் அதனால் எனக்கு போகும் வழியில் குடிக்கத் தண்ணீர் வேண்டும் என்றாள் . சூனியக்காரி எச்சரிக்கையாக கொஞ்சம் தண்ணீரையே தந்தாள்.
வியபாரியும் எலோனாவும் புறப்பட்டார்கள். சூனியக்காரி நிம்மதியாக படுத்தாள். தேவதை திட்டப்படி வந்தது. இருவரையும் குளத்திற்கு அழைத்துச் சென்றது. தண்ணீராக மாறிய நீமுவை மட்டும் எப்படி பிரிப்பது என்று சிந்தித்தது. குளத்தில் இருந்த எல்லா மீன்களையும் கூப்பிட்டது நீமுவை மீட்க உதவுமாறு கேட்டது. எல்லா மீன்களும் ஒத்துக்கொண்டன.
குளத்துக்கே உரிய எல்லா தண்ணீரையும் குடிக்கச் சொன்னது அடுத்த நொடியே நீமு மட்டும் தண்ணீராக இருந்தான் . எலோனா தன் புட்டியில் ஊற்றிக் கொண்டாள். உடனே மீன்கள் குளத்தை நிரப்பின. சூனியக்காரி அங்கு வந்தபோது நீமு இல்லாததால் மகிழ்ச்சி அடைந்தாள் .
சூனியக்காரி இருவரையும் மகிழ்ச்சியாக அனுப்பினாள். தோட்டத்தின் எல்லையில் வந்த தேவதை தண்ணீரை நீமுவாக மாற்றி வெளியே அனுப்பியது. வியாபாரியும் அப்படியே தப்பித்தான்.
சூனியக்காரி குளத்திற்குச் சென்று நீமுவை இரவெல்லாம் தேடினள். அடுத்த நாள் விடிந்தும் தேடினாள். கோவத்திலும் வெறுப்பிலும் தண்ணீரிலே மூழ்கி இறந்தாள்.
எலோனாவும் நீமுவும் பெற்றோருடன் சேர்ந்தனர். அதன்பிறகு சூனியக்காரியின் தோட்டம் யாருக்குமே தெரியவில்லை. கோடை இல்லத்திற்கு வரும் எல்லோரும் மகிழ்தனர்.