Friday, 6 April 2018

குழந்தை இலக்கியம்


         காணாமல் போன புழு 

     

      காட்டில் பறவைகள் விலங்குகள் உட்பட  எல்லோரும் மகிழ்ச்சியாக விளையாடியபடி இருந்தனர் ஆனால் ஒரு புழு மட்டும் யாரோடும் பேசாமல் விளையாடாமல் இலையைத் தின்று கொண்டே இருந்தது . அங்கும் இங்கும் மரத்தின் கிளைகளில் தாவிய படியே இருந்த அணில் இதைக் கவனித்தது .

 "புழுவே ஏன் எப்போதும் இலையைத் தின்றபடியே இருக்கிறாய் ?  எங்களோடு  வந்து விளையாடு" என்று அழைத்தது. 

  பதில் எதுவும் சொல்லாமல் புழு இலையைத் தின்றபடியே இருந்தது. மரத்தில் பழங்களைக் கொத்தி தின்று கொண்டு இருந்த கிளி இந்த உரையாடலைக் கேட்டு கீழே பறந்து வந்து , 

" புழுவே ஏன் எங்களோடு விளையாட வராமல் எப்போதும் இலையைத் தின்று கொண்டே இருக்கிறாய் ?  நீ இப்படியே தின்று கொண்டே இருந்தால் உடல் பெருத்து விடுவாய் , வா விளையாடலாம் "
– என்று கிளி கூப்பிட்டது அதற்கும் புழு எந்த பதிலையும் சொல்லாமல்  இலையைத் தின்றபடியே இருந்தது . 

  புழு யாரோடும் விளையாடாமல் பேசாமல் இருப்பது அருகில் இருந்த எல்லா பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் தெரிந்துவிட்டது . இதனால் அங்கு விளையாடிய எல்லோருமே புழுவைப் பற்றியே பேசினர் . 

  இதைக் கேள்விப்பட்ட மயில் , 

" என் அழகிய தோகையைப் பார்த்து வியந்து பேசாதவர்களே இல்லை ,  நான் போய் புழுவிடம் பேசுகிறேன்" என்றது . புழுவின் அருகில் வந்து தோகை விரித்து ஆடி பேசியது.  மயிலின் பேச்சை சிறிதும் சட்டை செய்யாமல் , புழு எப்போதும் போல தின்றது. மயில் ஏமாற்றம் அடைந்து சென்றது.

  கலைமான் , 
  மயிலின் சோர்ந்த முகத்தைப் பார்த்தது .  என்ன காரணம் என கேட்டறிந்தது.   பிறகு அழகிய வெள்ளைப் புள்ளிகளை உடைய அது புழுவிடம் சென்றது.

 "என்னுடைய அழகிய  கொம்புகளைப் பார் , இதன் மீது ஏறி விளையாடுவதற்கு வா , உலகில் யாருக்குமே கிடைக்காத அதிஷ்டம் உனக்கு இருக்கு" என்று கூறியது . புழு அமைதியாக தின்றது. 

 "இந்தப் புழுவுக்கு ரொம்பத் திமிறு யார் என்ன பேசினாலும் கல்லுளி மங்கனைப் போலவே இருக்கு"  

– என புழுவைப் பற்றி தன் அருகில் உலவிய கரடியிடம் கூறியது மான் 

     "ஓ அப்படியா" என வியந்த கரடி ,

 "நானும் அந்தப் புழுவைப் பார்க்கணும்,  தேனின் சுவைக்கு மயங்காதவர் உலகில் யார் ?  நான் பேச வைக்கிறேன்" 

– என மனதுக்குள்ளே சொல்லி , மிகச் சுவையான தேனை கையில் ஏந்தியபடி புழுவிடம் வந்தது . 

" அழகிய பச்சை நிற புழுவே என்னைக் கொஞ்சம் பார் - 
நான் கைகளில் ஏந்தி இருக்கும் அதி சுவையான தேனைப் பார் - சுவையற்ற இலையை விட்டு விட்டு வா " 
– என ஏதோ கவிதை சொல்வது போல  பேசியது கரடி,  புழு அதை ஏரெடுத்தும் பார்க்கவில்லை அதனால் கோபம் அடைந்து, 
"உன்னை என்ன செய்யப் போகிறேன் பார் " 
– என அங்கிருந்து புறப்பட்டது . 

கோபமாக வரும் கரடியிடம் கோபத்திற்கான காரணத்தைக் கேட்டது முயல் . கரடி நடந்ததைக் கூறியது

  இந்த வினோத செயலைக்  கேள்வி பட்ட முயல் தானும் புழுவைப் போல தின்றபடியே இருந்தால் எப்படி இருக்கும் என்ற ஆசையோடு புறப்பட்டது . 


"என்ன சாப்பிடுவது ? கேரட் சாப்பிடலாமா ? முள்ளங்கி சாப்பிடலாமா? என்று சிந்தித்தது. முள்ளங்கி காரமாக இருக்கும் நாள் முழுவதும் சாப்பிட முடியாது  எனவே கேரட்டைதான் சாப்பிடனும் , அதுதான்  கொஞ்சமாவது இனிப்பாக இருக்கும் என நினைத்தது. 

   முயல் உடனடியாக ஒரு கேரட் தோட்டத்துக்குச் சென்றது. அழகிய ஆரஞ்சு நிற கேரட்டுகளை பறித்து  சாப்பிடத் தொடங்கியது. முதலில் மகிழ்ச்சியாகத்தான் இருந்தது ஆனால் கொஞ்சம் நேரமாக நேரமாக வயிறு வலிக்க ஆரம்பித்தது . முயலுக்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை . காட்டில் இருக்கும் ஒரே மருத்துவர் கீரி தான் .  விசமுடைய நகப்  பாம்பைக் கடித்தாலும் ஏதேனும் ஒரு மூலிகையைச் சாப்பிட்டு வாழும்  கீரியிடம் முயல் சென்றது. நடந்ததைக் கூறியது. 

   "முயலே , நீ குதித்து குதித்து ஓடினால் விரைவாக சீரனம் ஆகி  உன்னுடைய வயிற்று வலி போய்விடும் " என்றது கீரி. 

    முயல் குதித்துக் குதித்து ஓடியது. தலைகீழாக பல்டி அடித்தது . வலி குறைந்தது மாதிரி தெரியவில்லை. உடலெங்கும் மண்ணைப் பூசியது தான் மிச்சம், முயலின் இந்த விசித்திரமான செயலைப் பார்த்த யானை , முயலைக் கூப்பிட்டது. ஏன் இப்படி நடந்து கொள்கிறாய்? உனக்கு என்ன ஆச்சு? எனக் கேட்டது. முயல் தனக்கு வயிற்று வலி வந்த வரலாறைக் கூறியது. யானை குலுங்கி குலுங்கி சிரித்தது ஆனாலும் அந்தப் புழுவைப் பற்றிக் கேட்டதும் அதைப் பார்க்க ஆர்வமாகி உடனே  புறப்பட்டது. 

      யானை புழு இருக்கும் இடத்திற்குச் சென்ற போது அங்கு ஒரு பெரும் கூட்டமே கூடி இருந்தது. யானை வருவதைப் பார்த்து எல்லோரும் ஒதுங்கி வழிவிட்டனர். 

    "இந்தப் புழுவுக்கு காது கேட்காது அதனால் தான் நாம் என்ன பேசினாலும் அதற்கு கேட்கல" என்று ஒரு சிட்டுக்குருவி கூறியது , இதனால் யானை கொஞ்ச நேரம் அமைதியாக நின்றது. தன் முறம் போன்ற பெரிய காதுகளை அசைத்தது'   எல்லா காட்டு உயிர்களுமே அங்கு கூடி விட்டன.

   திடீரென காட்டில் இருந்த விலங்குகள் பறவைகள் எல்லாம் காணாமல் போனதைக் கண்ட சிங்கம் என்ன நடந்திருக்கும் என்று சுற்று முற்றும் பார்த்தது. சற்றுத் தொலைவில் ஒரு புலி வருவதைப் பார்த்தது . வரட்டும் அதனிடம் கேட்கலாம் என இருந்தது . புலி அருகில் வரும் போது அங்கு ஒரு எலியும் வந்து சேர்ந்தது. 

   வேடன் விரித்த வலையைக் கடித்து  சிங்கத்தைக் காப்பாற்றியதில் இருந்து எலி சிங்கத்திடம் பயமின்றி வருவதும் பேசுவதுமாக இருந்தது. எலி ஏதோ பரபரப்பான செய்தியைச் சொல்ல வருவதை அறிந்த சிங்கம் கேட்பதற்கு ஆவலாக இருந்தது. 

    புழுவைப் பற்றியும்   காட்டில் உள்ள எல்லாரும் எங்கு உள்ளனர் என்பது பற்றியும் முயலின் வயிற்று வலி பற்றியும் விரிவாக எலி கூறியது. 
   சிங்கத்திற்கும் புலிக்கும் இந்த செய்திகளைக் கேட்டதும் ஆர்வம் தாங்க வில்லை . புழு இருக்கும் இடத்திற்கு புறப்பட்டன . 

   சிங்கமும் புலியும் வருவதைப் பார்த்த எல்லோரும் அமைதியாக இருந்தனர் . "எங்கே அந்தப் புழு " என்று சிங்கம் முன்னாடி செல்ல புலி பின்னே சென்றது. ஆனால் புழு அங்கு இல்லை மாயமாக மறைந்துவிட்டது. அணில் , மரங்கொத்தி , தேன்சிட்டு ஆகியவை மரம் முழுவதும் தேடின. எங்குமே புழு காணவில்லை . 
"புழு எங்கே போனது? நான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட பார்த்தேனே" என்றது யானை . 
   எங்கு தேடியும் புழு கிடைக்காததால் காடே பரபரப்பானது. அங்கு ஒரு இலையின் அடியில் கூம்பு போன்று கொஞ்சம் உருண்டையாக நூலால் ஒன்று இருந்தது இதைக் கவனித்த நரி " புழு , புலியிடம் தப்பிக்க ஏதோ திட்டம் தீட்டி இருக்கு"  என்றது. எப்படியும் இலையைத் தின்ன புழு வெளியே வரும் என்று எல்லோரும் காத்திருந்தனர். ஆனால் அந்தக் கூம்பு வடிவ கூட்டில் துளையிட்டு  திடீரென ஒரு அழகிய பட்டாம்பூச்சி பறந்து சென்றது. 


    ஏமாற்றம் அடைந்த சிங்கம் இனிமேல் காட்டில் இது போல் எதற்கும் கூட்டம் போடக்கூடாது . அவரவர் வேலையைப் பார்க்கவும் என்று எச்சரித்தது . எல்லாம் அமைதியாகக் கலைந்து சென்றன. அந்த நிகழ்வுக்குப் பிறகு காட்டில் இன்று வரை விலங்குகள் பறவைகள் ஒன்று கூடவே இல்லை. 

    "புழு எங்கே போனது ? யாருக்காவது தெரியுமா? தெரிஞ்சா சொல்லுங்க" .
    
- பூவிதழ் உமேஷ் 



0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home