Thursday, 5 April 2018

குழந்தை இலக்கியம்

      யார் பலசாலி


      வயதான பெரியவர் ஒருவர் மொரப்பூரில் வாழ்ந்து வந்தார் அவருக்கு வயது நூறு. அவரிடம் பெரியதாக சொத்து ஏதுமில்லை ஒரு மாடு மட்டும் இருந்தது . அதற்கு தேவையான தீனியை கொஞ்ச நேரத்திலேயே சேகரித்து விட்டு வேறு ஏதேனும் வேலை செய்ய சென்று விடுவார் . அவருடைய இரண்டு மகன்களும் வெளியூரில் வேலை செய்து வந்தனர் . 



    ஒரு நாள் திடீரென உடல் நலம் குன்றி இறந்து போனார் . பிறகு மகன்களால் மாட்டுக்குப் புல்லு பொடி சேகரித்துப் பராமரிக்க இயலவில்லை  எனவே, மாட்டைப்  பக்கத்து ஊர் சந்தையில் விற்று விடுவது என முடிவு செய்து விற்பதற்காக ஓட்டிச் சென்றனர் .



    இருவரும் முன் பின் ஒருவராக மாட்டை ஓட்டிச் சென்றனர் . வழியில் எதிரே ஒரு வயதான பெரியவர் வந்தார். முன்னால் சென்றவனிடம்  எங்கே போறீங்க என்று விசாரித்தார் அவன் , நாங்க கம்பைநல்லூர் வெள்ளிச் சந்தையில் மாட்டை விற்க போகிறோம் என்று சொன்னான். 


   "இவ்வளவு மெதுவாகப் போனால் நேரத்துல சந்தைக்குப் போக முடியாது" என்று பெரியவர் சொன்னார் . 


   " அதை என்னிடம் மட்டும் சொன்னால் போதாது, மாட்டைப் பின்னால் ஓட்டி வரும் என் தம்பியிடம் சொல்லுங்க " என்றான் 


    பெரியவர் மாட்டைப் பின்னால் ஓட்டி வருபவனிடம் சொல்வதற்காக வேகமாக நடந்து வந்தார் ரொம்ப நேரமாகியும் வந்து, சேரவில்லை மாட்டின் வயிறு பகுதிக்கு வந்த போது " எவ்வளவு பெரிய மாடு " என்று வியந்து போனார் . 


    அவர் செல்லமாக கழுகு ஒன்றை வளர்த்து வந்தார் .  அதை எப்போதும் தன் சட்டைப்பையிலே வைத்திருப்பார் . கழுகுக்குப்  பசிக்கும் போது இரை தேட பறக்க விடுவார் . அன்றும் ஏதேனும்  இரை தேடட்டும் என்று கழுகை வெளியே பறக்க விட்டார் . 


   கழுகு மாட்டைத் தூக்கிக் கொண்டு பறந்தது. சிறிது நேரத்துக்குப் பிறகு அருகில் இருந்த காட்டில் ஒரு மரத்தின் மீது அமர்ந்து மாட்டைக் கொத்தித் தின்ன ஆரம்பித்தது .


    திடீரென வானம் கறுத்து மழைப் பெய்யத் தொடங்கியது , காட்டில் மேய்ந்து கொண்டிருந்த கொழுத்து வளர்ந்த செம்மறி ஆடு ஒன்று மழைக்காக அந்த மரத்தடியில் ஒதுங்கியது . அதே போல மழைக் குளிரைத் தாங்கமுடியாத நரி ஒன்றும் மரத்தடிக்கு வந்து ஆட்டின் தாடியின் கீழே நின்று கொண்டது . 


    வெகு நேரமாகியும் மழை நிற்பதாகத் தெரியவில்லை.  வானம் வெளி வாங்கத் தொடங்கும் முன் சிறு சிறு தூறல்களைப் போட்டது. மழை ஓய்ந்து விட்டதா என நரி அன்னாந்து பார்த்தது அதன் மூச்சுக்காற்றில் மிரண்டு போன ஆடு ஏதோ புயல் காற்று வந்து விட்டதாக மிரண்டு, உடலைக் குலுக்கி ஓடியது , அதனால் மரம் அதிர்ந்து குலுங்கி சாய்ந்தது . 



    ஏதோ ஆபத்து நேர்வதாய் நினைத்த கழுகு அங்கிருந்து பறந்து விட்டது . மாதங்கள் உருண்டு ஓடின . மாட்டின் தோலின் மீது ஒரு புதிய நகரமே ஒரு பக்கம் உருவாகி விட்டது . 



    திருமணம் முடிந்து பல ஆண்டுகளாய் குழந்தை இல்லாத அரசனுக்கு நேற்று தான் குழந்தை பிறந்தது . தன் மனைவிக்கு வேட்டையாடி ஏதேனும் பரிசாக வழங்க காட்டுக்கு வேட்டையாட வந்தான் அரசன்  பொழுது சாயும் வரை எதுவும் கிடைக்கவில்லை . வெறுங்கையோடு தான் இன்று போக வேண்டுமே என கவலைப்பட்டான் , இறுதியில் அவன் காலுக்கு கீழே ஏதோ  தட்டுப்பட்டது அது ஒரு மாட்டுத் தோலின் வால் என்று தெரிந்தது . 


   அரசன் சிறிதும் தாமதிக்கவில்லை தன் மனைவிக்குப் பரிசாக இந்த மாட்டுத் தோலையாவது கொண்டு போய்க்  கொடுக்கலாம் என , அதை ஒரே கையால் இழுத்தான் அதன் மீதிருந்த நகரமே சரிந்து விழுந்தது.  வேகமாக மாட்டுத் தோலோடு சென்று தன் மனைவியிடம் தந்தான் .  அதை வாங்கிய அரசி சில நொடிகளிலேயே அதில் குழந்தைக்கு ஓர் அழகிய தொப்பியை செய்து முடித்தாள் . நேற்று பிறந்த குழந்தை அதை எடுத்து தலையில் அணிந்து கொண்டது . 



    இக்கதையில் யார் பலசாலி ? 

-இறந்த பெரியவரா?

-மாட்டை ஓட்டிச் சென்றவர்களா?

-விரைந்து போகச் சொன்ன வழிப்போக்கரா?

- மாட்டைத் தூக்கிப் பறந்த பருந்தா?

- பருந்தையும் கழுகையும் சுமந்த மரமா? 

- தன் சிலிர்ப்பால் மரத்தையே சாய்த்த ஆடா?

_ தன் மூச்சல் ஆட்டையே நடுங்க வைத்த நரியா?

- ஒரே கையால் மாட்டுத் தோலை இழுத்த அரசனா ?

_  சில நொடிகளிலே தோலில் தொப்பி செய்த அரசியா ?

- அந்த தொப்பியை அணிந்த பிறந்து ஒரு நாளே ஆன குழந்தையா? 

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home